மளிகை கடைக்காரர் படுகொலை
பெரியபட்டினம் அருகே கீேழ தள்ளி விட்டதில் மளிகை கடைக்காரர் படுகொலை செய்யப்பட்டார்.
பெரியபட்டினம் அருகே கீேழ தள்ளி விட்டதில் மளிகை கடைக்காரர் படுகொலை செய்யப்பட்டார்.
கீழே தள்ளி விட்டார்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் நசீர்அலி (வயது 53). பலசரக்கு கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நசீர்அலி பெரியபட்டினம் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை பெரியபட்டினம் பண்ணக்கரை சம்சுதீன் மகன் செய்யது இப்ராகிம் மூலம் விற்பனை செய்தாராம். இந்த நிலத்திற்கான பணத்தில் ரூ.12 லட்சத்தை மட்டும் செய்யது இப்ராகிம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாராம்.
இது குறித்து பலமுறை கேட்டும் கொடுக்கவில்லையாம். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் நசீர் அலி தொழுகை முடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரை வழிமறித்த செய்யது இப்ராகிம் கொடுக்காத பணத்தை ஊரெல்லாம் சொல்லி அசிங்கபடுத்துகிறாயா? என்று கேட்டு தாக்கி கீழே தள்ளினாராம். நசீர்அலி கீழே கிடந்த செங்கலில் விழுந்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்தபோது செய்யது இப்ராகிம் தப்பி ஓடிவிட்டாராம்.
சாவு
மயங்கிய நிலையில் இருந்த நசீர்அலியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் நிலைமை மோசமானதால் பெரியபட்டினம் பகுதி தனியார் கிளினிக்கில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நசீர்அலியின் மனைவி ஜரியாபேகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து செய்யது இப்ராகிமை தேடி வருகின்றனர்.