உசிலம்பட்டியில் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டம்

உசிலம்பட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-21 20:01 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

உசிலம்பட்டியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ், உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர், தங்களின் கனவு திட்டமாக உள்ள 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை சிதைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும், நீர்நிலைகள் குடியிருப்புகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்கு எந்த கல்குவாரிகளும் அமைக்க கூடாது என்ற அரசானை இருந்தும் அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய நடவடிக்கை

தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ. இந்த 58 கால்வாய் உசிலம்பட்டி பகுதி விவசாய தேவை மட்டுமல்லாது குடிநீர் தேவைக்கான திட்டமாக உள்ளது என்றும், கால்வாயில் நவீன வெடிகளை வைத்து வெடிப்பதால் தொட்டிப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இந்த கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கையை முன்வைத்தார். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு விதை மற்றும் தக்காளி செடிகளை கலெக்டர் சங்கீதா, அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்