பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இன்கோசர்வ் இயக்குனருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.;
கூடலூர்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இன்கோசர்வ் இயக்குனருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.
குன்னூர் இன்கோசர்வ் நிர்வாக இயக்குனர் மோனிகா ராணாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் வாசு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:-
விவசாயிகள் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதை நம்பி தொழிலாளர்கள் பலர் உள்ளனர். இந்தநிலையில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரியில் 15 கூட்டுறவு தொழிற்சாலைகளில் 30 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறார்கள்.கோடை காலத்தில் பச்சை தேயிலை உற்பத்தி குறைகிறது. ஆனால், பரவலாக மழை பெய்தால் மகசூல் அதிகமாகிறது. இதனால் அதிகமாக பச்சை தேயிலை உற்பத்தியாகும் போது, சிறு விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளில் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
வாங்க மறுப்பு
தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை சிறு விவசாயிகளுக்கு வழங்க அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் முன் வராத நிலை உள்ளது. கடந்த ஆண்டு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.19.23 பைசா வரை மட்டுமே விலை கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டமாக ஏற்படுகிறது. பச்சை தேயிலை உற்பத்தி செலவுகளும், உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. ஆகவே, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை இன்கோசர்வ், அனைத்து தேயிலை தொழிற்சாலைகளிலும் விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு வழங்க வேண்டும். சிறு விவசாயிகளின் பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.