பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கோத்தகிரி
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தும்பூர் ஐ.போஜன் தலைமை தாங்கினார். 19 ஊர் தலைவர் ராமாகவுடர் முன்னிலை வைத்தார். சாமில்திட்டு போஜன் வரவேற்றார். கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு போதுமான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் மத்திய அரசின் வர்த்தக துறை மந்திரியை நேரில் சந்தித்து மனு அளிப்பது, கூட்டுறவு தொழிற்சாலைகளை புனரமைத்து, சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை மாதத்திற்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 15 ரூபாய் 46 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது வருத்தமளிக்கிறது. கொள்முதல் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்த போது, குறைந்தபட்ச கொள்முதல் விலை குறைந்துக் கொண்டே வருவதால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு ரூ.30 கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மலை மாவட்ட விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆண்டிகவுடர், சதீஷ் பெள்ளன், சந்திரன், லலிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.