தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்: சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் அறிவுரை

உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2023-09-05 21:39 GMT

சென்னை,

சென்னை போலீஸ்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தார்.

பின்னர் அவர், தடகளம், ஆக்கி, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கையெறிபந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற போட்டிகளுக்கு தேவையான உபகரணங்களை போலீஸ்துறை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

கமிஷனர் பேட்டி

புதிதாக திறக்கப்பட்ட குத்துச்சண்டை மைதானத்தில் பெண் போலீஸ் விளையாட்டு வீராங்கனைகளுக்கான பயிற்சி குத்துச்சண்டை போட்டியை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை பெருநகர போலீஸ் விளையாட்டு அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் உலகளவிலான உலக விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் இவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

இத்திட்டத்திற்காக அரசு சார்பில் ரூ.11 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வருங்காலங்களில் போலீஸ்துறை விளையாட்டு வீரர்கள் உலகளவிளான போட்டிகளில் முத்திரை பதித்தும் தமிழக போலீஸ்துறைக்கும், சென்னை போலீஸ் துறைக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை போலீஸ் இணை கமிஷனர் (தலைமையிடம்) கயல்விழி, துணை கமிஷனர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) எம்.ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), எஸ்.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்