திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு 'ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை' நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், இன்று முதல் 9-ஆம் தேதி வரை திமுக ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திமுக அரசு 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.
தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.