மீனவர்கள் வலையில் சிக்கிய புல்லன் மீன்கள்
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய புல்லன் மீன்களை வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.;
குளச்சல்,
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய புல்லன் மீன்களை வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.
மீன்பிடி துறைமுகம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். இவற்றில் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் இருக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு மதியம் கரைக்கு திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.
கரைதிரும்பிய விசைப்படகுகள்
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஏற்கனவே கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை.
ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரை திரும்பின. அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. என்றாலும் குறைவான மீன்களே கிடைத்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் ஒருசில விசைப்படகுகள் கரை திரும்பின. அவற்றில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மீன்கள் இருந்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ புல்லன் மீன் ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது. அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.
கேரள பக்தர்கள்
இந்தநிலையில் மண்டைக்காடு கோவில் மாசி கொடை விழாவுக்கு ஏராளமான கேரள பக்தர்கள் வருகிறார்கள். இவர்களில் பலர் மீன்கள் வாங்குவதற்கு குளச்சல் மீன்பிடித்துறைமுகத்துக்கு வருகிறார்கள். இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏற்கனவே மீன்வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு மீன்கள் விற்கப்பட்ட நிலையில் கேரள பக்தர்களின் வரவால் மேலும் விலை உயர்ந்தது. இதனால் உள்ளூர் மீன் பிரியர்கள் மீன்கள் கிடைக்காமல் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் குளச்சல் மீன்பிடித்துறைமுகம் களைக்கட்டி காணப்பட்டது.