தமிழ்நாட்டில் 5 கோவில்களில் மகா சிவராத்திரி விழா பிரமாண்ட ஏற்பாடுகள்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 கோவில்களில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 கோவில்களில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சிவராத்திரி விழா
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழாவை மேலும் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகில் உள்ள எருமைக்கடா மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
இந்தநிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் எருமைக்கடா மைதானத்தை பார்வையிட்டு, அங்கு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சிவராத்திரி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கோவை பட்டீஸ்வரர் மற்றும் நெல்லையப்பர் கோவில் ஆகிய 5 கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது.
ஏற்கனவே 4 கோவில்களில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு முடிவு செய்துள்ளோம். தற்போது நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டையில் விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிவராத்திரியை கொண்டாடும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக பட்டிமன்றங்கள், ஆன்மிகம் சார்ந்த பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அரங்குகள்
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பிரசாதங்கள், வரலாற்று புத்தகங்கள், புதுப்பிக்கப்பட்ட 108 கோவில் புத்தகங்கள், 13 போற்றி புத்தகங்கள், கோவில்களின் பழமையை உணர்த்தும் இசைக்கருவிகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படும்.
நெல்லை பகுதி மக்களுக்கு இனிய சிவராத்திரியாக அமைவதற்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அன்புமணி, கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.