அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
சுதந்திரதினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிராமசபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான 15-ந் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் தவறாமல் கிராமசபை கூட்டம் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
விவாதிக்க வேண்டிய பணிகள்
கிராம சபை கூட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், கிராம சுகாதாரத் திட்டம் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை -உழவர் நலத்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மழைநீர் சேகரிப்பு, வறுமை குறைப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணைய வழியாக செலுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும்.
பார்வையாளர்கள்
கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.