கழிவுநீர் வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி-வாகன உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுரை

கழிவுநீர் வாகனங்கள் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க அந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன உரிமையாளர் களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.

Update: 2023-06-02 01:30 GMT

பொள்ளாச்சி

கழிவுநீர் வாகனங்கள் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க அந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன உரிமையாளர் களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் ஸ்ரீ தேவி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், சுகாரதார ஆய்வாளர்கள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், உணவகங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், தங்கும் விடுதிகள், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தம்

கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், வாகனங்கள் பதிவு செய்ய வேண்டும். நகராட்சியில் உரிமை பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் நகராட்சி பகுதிகளில் கழிவுநீரை அகற்றும் வாகனங்களை இயக்க கூடாது. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாளர்கள் எந்திரங்கள் மூலம் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் உரிமம் பெற்ற வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும். அந்த கருவி தொடர்ந்து செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் அதன் பதிவுகளை அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு குறையாமல் காப்பீடு செய்து, அதன் நகலை நகராட்சியில் அளிக்க வேண்டும். கழிவுநீர் வாகனங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இரவு நேரங்களில் இயக்க கூடாது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகள், குடிநீர் லாரிகள் என பதிவு செய்யப்பட்டு உள்ள வாகனங்களை, கழிவுநீர் வாகனம் என பதிவு சான்றிதழ் முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.

அபராதம் விதிக்கப்படும்

அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்று, காப்பீடு மற்றும் டிரைவர்கள், பணியாளர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற டாக்டர்களிடம் மருத்துவ தகுதி சான்று பெற்று இயக்க வேண்டும். விரைவில் கட்டணமில்லா செல்போன் எண் பெறப்படும். கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய விரும்புவோர் அந்த எண்ணில் அழைக்க வேண்டும். கழிவுநீர் வாகனங்களில் அகற்றப்பட்ட கழிவுநீரினை நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதற்காக ஏற்படுத்தப்பட்டு உளள இடத்தில் மட்டும் ஊற்ற வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பொது வெளியில் ஊற்ற கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி துறை விதிகளின்படி மேற்கண்ட விதிகளை மீறினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுவதோடு, உரிமமும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்