ஒப்பந்த செவிலியர்களை தந்திரமாக வெளியேற்ற அரசு முயற்சி - அண்ணாமலை

ஒப்பந்த செவிலியர்களை தந்திரமாக வெளியேற்றும் மோசடியை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2023-01-07 08:07 GMT

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் 6-ந்தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடுகிறார்கள். இடஒதுக்கீடு முறை ஏதும் பின்பற்றப்படவில்லை, மூன்று மாதம் கூடபணி செய்யாத செவிலியர்கள், நிரந்தரம் கோரி போராடுகிறார்கள்.

இவர்களை எவ்வாறு பணி நிரந்தரம் கோர முடியும் என்று உண்மையை மறைத்துப் பேசியுள்ளார் அமைச்சர். ஆதாரம் சுகாதரத்துறை செயலரின் அரசுக் கடிதம் எண். 11358/ஆ1/2022-1-தேதி 29.3.2022 முதலில், பெருந்தொற்று காலத்தில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகத் தொகுப்பூதிய அடிப்படையில், முறைப்படி மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்றும் பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மருத்துவமனைகளில் கடுமையான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், நோயாளிகளை உரிய நேரத்தில் கவனிக்க முடியாத அவலநிலை நிலவுகிறது.

மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்கத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை மாவட்ட சுகாதார இயக்கத்திற்கு மடை மாற்றி அவர்களைத் தந்திரமாக வெளியேற்றும் மோசடியை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு, உடனடியாக பணி நிரந்தரம், உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்