அரசு நிலத்துக்குரிய குத்தகை தொகையை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் வசூலிக்க வேண்டும் -ஐகோர்ட்டு

குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் வாடகை தொகையை சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திடம் இருந்து 3 மாதங்களுக்குள் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-03-30 22:06 GMT

சென்னை,

சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு கடந்த 1968-ம் ஆண்டு 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு வழங்கியது. கடந்த 1998-ம் ஆண்டு அதன் குத்தகைக்காலம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் குத்தகைக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகு, கடந்த 2004-ம் ஆண்டு வரையிலான குத்தகை வாடகை பாக்கி ரூ.31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்தை செலுத்தக்கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். ஆனால், அந்தத்தொகையை சத்யா ஸ்டுடியோ தரப்பில் செலுத்தவில்லை.

சாலை திட்டம்

இதையடுத்து, கடந்த 2008-ம் ஆண்டு அந்த நிலத்தை திருப்பி எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டு பசுமை வழிச்சாலை மற்றும் டி.ஜி.தினகரன் சாலை ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அரசு இசைக் கல்லூரி மற்றும் சத்யா ஸ்டுடியோ அருகே உள்ள அரசு நிலம் வழியாக துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்க அரசு திட்டமிடப்பட்டது.

வாய்ப்பு

ஆனால், நிலுவையில் இருந்த இந்த வழக்கின் காரணமாக அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு துறைகளுக்கு இடையிலான நிலப்பரிமாற்ற திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குத்தகை வாடகை தொகை கேட்டு 2004-ம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு பலமுறை வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வாடகை தொகையை வழங்கவில்லை. குத்தகை காலமும் முடிவுக்கு வந்து விட்டது.

நிலம் ஒப்படைப்பு

கடந்த 2008-ம் ஆண்டு சத்யா ஸ்டுடியோவின் அப்போதைய நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், குத்தகை நிலத்தை மயிலாப்பூர் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்து விட்டார். அவரும் குத்தகை நிலம் மீட்கப்பட்டு விட்டது என்றும் அதை வேலி போட்டு பாதுகாக்கவேண்டும் என்றும் கலெக்டருக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

எனவே, குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இந்த நிலத்தை வேலி போட்டு, சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும்.

வசூலிக்க வேண்டும்

மனுதாரரிடம் இருந்து குத்தகை வாடகை பாக்கித் தொகையை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் 3 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். அரசு இசைக் கல்லூரி மற்றும் சத்யா ஸ்டுடியோ அருகே உள்ள அரசு நிலம் வழியாக துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்