அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
சங்கரன்கோவில் அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மேலாண்மை குழுவினர் வலியுறுத்தினர்.
சங்கரன்கோவில் அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மேலாண்மை குழுவினர் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 419 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ மனோகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் நடராஜன், வழங்கல் அலுவலர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார சீர்கேடு
பா.ஜ.க. பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் கந்தசாமி கொடுத்துள்ள மனுவில், ஆலங்குளம் தொட்டியான் குளத்தில் தனி நபர்கள் 500 பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது அந்த இடத்தில் பன்றிகள் வளர்க்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கூறி உள்ளார்கள். பன்றிகள் வளர்ப்பவர்கள் பன்றிக்கு உணவாக ஓட்டல் கழிவுகள், உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், கோழி கழிவுகள் போன்றவற்றை குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் சேதம் அடைகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கு மைதானம் வேண்டும்
சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ஜெயலெட்சுமி மற்றும் பெற்றோர் பிரதிநிதிகள் பூமாரி, முத்தமிழ் செல்வி, செல்வின், கணேசன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 2,264 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் இதுவரை இல்லை. பள்ளி வளாகத்தின் அருகிலேயே பயன்பாட்டுக்கு இல்லாமல் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை பள்ளி மைதானத்திற்கு கொடுக்கும் பட்சத்தில் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அந்த இடத்தை பள்ளிக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் புலிகள் கட்சி
தமிழ் புலிகள் கட்சியின் ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சதீஷ் வள்ளுவன் கொடுத்துள்ள மனுவில், தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் பரவலாக பணி சுமைக்கு ஆளாக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார்கள். சம்பள பட்டுவாடா பிரச்சினைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.