மின்கட்டண உயர்வை அரசு அனுமதிக்க கூடாது-இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்வாரியம் வருகிற ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 4.70 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்வாரியம் வருகிற ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 4.70 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியான தகவலை அரசு மறுத்தது.
ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின்வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும். குறிப்பாக தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது, அனுமதிக்கவும் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.