பட்டுக்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்

பட்டுக்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-03-11 19:43 GMT

தினமும் 6 கிலோ மீட்டர் தூரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் நடந்து செல்லும் நிலை உள்ளதால் பட்டுக்குடி கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம்

பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பட்டுக்குடி கிராமம் உள்ளது. இதன் அருகில் கூடலூர், புத்தூர், தேவன்குடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் நகர பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சுமார் 6 கி.மீ. தூரம் நடந்தும், சைக்கிளில் சென்றும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தஞ்சை, திருவையாறு, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

பஸ் நிறுத்தம்

இங்கிருந்து ஏராளமான கூலி தொழிலாளர்களும் வெளியூர் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தஞ்சையிலிருந்து பட்டுக்குடி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு உள்ளது. காலப்போக்கில் இந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதி மக்களின் நலன் கருதி மீண்டும் இந்த பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றை கடந்து வருகின்றனர்

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் அய்யம்பேட்டை, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இதற்காக இவர்கள் தினந்தோறும் சுமார் 6 கி.மீட்டர் தூரம் நடந்தும், சைக்கிளிலும் செல்லும் அவல நிலை உள்ளது. அதேபோல அந்தபகுதி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்காக திருவையாறு, தஞ்சை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றின் வடபுற கரையோரம் உள்ள அரியலூர் மாவட்ட கிராமத்தினர் தங்கள் தேவைகளுக்கு ஆற்றை கடந்து பட்டுக்குடி கிராமத்திற்கு வந்து இங்கிருந்து தஞ்சை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும்

அதேபோல இந்த பகுதியில் இயங்கி வரும் ஏராளமான செங்கல் சூளைகளில் வெளியூர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதி கிராமத்தினர் குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வெளியூர் சென்று வர மிகுந்த அவதி அடைய வேண்டியுள்ளது. மழை காலங்களில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இக்கிராமத்திற்கு தஞ்சையிலிருந்து முன்பு இயங்கி வந்த அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்