அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணம்-வெள்ளி சங்கிலி பறிப்பு
தஞ்சையில், பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணம் மற்றும் வெள்ளி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இதையடுத்து ஊழியர்கள் 1 மணி நேரம் பஸ்களை இயக்காமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில், பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணம் மற்றும் வெள்ளி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இதையடுத்து ஊழியர்கள் 1 மணி நேரம் பஸ்களை இயக்காமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் அழகுதுரை(வயது 36). அரசு பஸ் டிரைவர். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(39). அரசு பஸ் கண்டக்டர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தஞ்சை ஜெபமாலைபுரம் நகர் கிளையில் பணிபுரிந்து வரும் இவர்கள் இருவரும் தஞ்சை-பட்டுக்கோட்டை-திருச்சி வழித்தட பஸ்சில் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல் இவர்கள் நேற்று முன்தினம் தஞ்சை- பட்டுக்கோட்டை-திருச்சி வழித்தட பஸ்சை இயக்கினர். இரவில் கடைசி நடையாக பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை தஞ்சை ஜெபமாலைபுரம் பணிமனைக்கு கொண்டு வந்தனர்.
சரமாரியாக தாக்கினர்
பின்னர் பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பணிமனை அலுவலர்களிடம் சமர்பித்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் இருவரும் ஜெபமாலைபுரம் பணிமனையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்ல சோழன் சிலை அருகில் பஸ் ஏறுவதற்காக நடந்து வந்தனர்.
சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், திடீரென அவர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அழகுதுரை, ஆறுமுகம் இருவரும் தங்களிடம் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், இருவரையும் சரமாரியாக கட்டையாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர்.
பணம்-வெள்ளி சங்கிலி பறிப்பு
பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.3800 மற்றும் வெள்ளி சங்கிலி, கைக்ெகடிகாரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து சென்றனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பஸ்களை இயக்காமல் போராட்டம்
இந்த தாக்குதலில் காயமடைந்த அழகுதுரை, ஆறுமுகம் இருவரும் ஜெபமாலைபுரம் பணிமனைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் பஸ்சில் சோழன் சிலைக்கு வந்து காயமடைந்த இருவரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று அதிகாலை 4 மணியளவில் ஜெபமாலைபுரம் பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல் டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
தொழிலாளர்களை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இருவரின் மருத்துவ செலவுகளையும் போக்குவரத்து கழக நிர்வாகம் ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது.
இது குறித்து தகவல் அறிந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து பஸ்களை இயக்கினர்.
பயணிகள் அவதி
இந்த நிலையில் 1 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படாததால் தஞ்சை பழைய பஸ் நிலையம், மற்றும் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் அவர்கள் பஸ்கள் வரும் வரை பஸ் நிலையத்தில் காத்துக்கிடந்தனர்.
அதிகாலையில் நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சை மேலஅலங்கம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் புருசோத்தமன்(22), மேலஅலங்கம் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராமன்(22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.