அரசு பஸ்-கார் மோதல்;புதுமாப்பிள்ளை பலி

தக்கலை அருகே அரசு பஸ் மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-09-18 20:43 GMT

தக்கலை:

தக்கலை அருகே அரசு பஸ் மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.

புதுமாப்பிள்ளை

தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியான். இவருடைய மகன் விக்டர் (வயது 36). இவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. விக்டரின் மனைவி சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். விக்டர் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு விக்டர், தனது நண்பரான பனவிளையை சேர்ந்த தர்மராஜ் மகன் சோபன் (33) மற்றும் வளர்ப்பு நாயுடன் காரில் தக்கலை பெருஞ்சிலம்பு பகுதிக்கு சென்றனர். பின்னர், மீண்டும் அவர்கள் வீட்டுக்கு திரும்பிக்கு கொண்டிருந்தனர். காரை விக்டர் ஓட்டினார். சோபனும், வளர்ப்பு நாயும் பின் இருக்கையில் இருந்தனர்.

அரசு பஸ்-கார் மோதல்

அவர்கள் தக்கலை அருகே உள்ள பட்டாணிக்குளம் பகுதியில் வளைவில் திருப்பியபோது, தக்கலையில் இருந்து வேளிமலை ேநாக்கி சென்ற அரசு பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பஸ்சின் வலதுபுறத்தில் புகுந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விக்டர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின் இருக்கையில் இருந்த சோபனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நாய் கதவு வழியாக குதித்தது விட்டதால் தப்பியது. விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே, இதுபற்றி தக்கலை போலீசுக்கு தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்தில் வந்த தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களின் உதவியோடு பஸ்சில் சிக்கியிருந்த காரை வெளியே இழுத்தனர்.

பின்னர், காருக்குள் இறந்த நிலையில் இருந்த விக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சோபனையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த விபத்து காரணமாக தக்கலை-குலசேகரம் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவற்றை போலீசார் சீர்செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்