அரசு கலை, அறிவியல் பட்டப்படிப்பு- மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு
மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 24-ந்தேதி (நாளை) வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.;
சென்னை,
தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம். பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
இதற்கிடையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விணணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 20-ந்தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 24-ந்தேதி (நாளை) வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, 2 லட்சத்து 52 ஆயிரத்து 406 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 145 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இந்தநிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.