தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2024-02-12 11:44 IST

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி 2 நிமிடங்களில் கவர்னர் உரையை நிறைவு செய்தார்.

இதையடுத்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர், அவை முன்னவர் துரை முருகன், கவர்னர் உரையை வாசிக்கவில்லை என்றாலும் அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கவர்னர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம்தான் கேட்க வேண்டும். கவர்னருக்கு என்ன பிரச்சனை என்பதை அரசு, கவர்னர், சபாநாயகரிடம் தான் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்