'ராஜ்பவனை அரசியல் பவனாக கவர்னர் மாற்றுகிறார்' சட்டசபையில் முதல்-அமைச்சர் ஆவேசம்

சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-04-10 23:58 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிர்வாக ரீதியாக பிரச்சினை இருந்து வருகிறது. தமிழக சட்டசபையில் இருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட 14 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் கவர்னரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2-வது தீர்மானம்

கவர்னர், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் தேவையில்லை' என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும், அதை கருணாநிதி வழிமொழிந்த போதிலும், அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதல்-அமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியை பின்பற்றி நானும் அதில் இருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை.

சர்க்காரியா அறிக்கை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் கவர்னர் இருக்க வேண்டும் என்று எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கவர்னர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அவர் கவர்னர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். அந்த பதவிக்கு என்னென்ன தகுதிகளை சர்க்காரியா அறிக்கை வரையறுத்து கூறியுள்ளதோ, அந்த தகுதிகளை எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்.

ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்

அதுவும் குறிப்பாக, பிரதமர் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

அதற்கு மேல் சென்று, ''வித் ஹோல்டு'' என்றால் நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று கவர்னர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த ''வித் ஹோல்டு அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதை கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கவர்னரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை'' என்பதே தெளிவு.

சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகள்

அதைவிட ஒரு மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், அதைக்கூட அமைச்சரவையின் அறிவுரைப்படியே கவர்னர் செய்ய வேண்டும் என்பதே அரசியல் நிர்ணய சபையில், இந்த அரசியல் சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடைபெற்றபோது சுட்டிகாட்டப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள். சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்டமன்றங்களுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன கவர்னருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.

அரசியல் சட்டம் கவர்னருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய அரசியல் சட்ட விசுவாசத்தை, அரசியல் விசுவாசம் அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி, அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்து பொதுவெளியில் பேசுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்.

அரசியல் பவனாக மாற்றுகிறார்

தமிழ்நாடு சட்டமன்றத்தை, இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி கொண்டிருக்கிறார்.

கவர்னரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல; கவர்னரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். கவர்னர் பேசி வந்த கருத்துகளுக்கு, பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்.

தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல

நீட் விலக்கு மசோதாநிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா என்பது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்து, வல்லுனர்கள் கருத்து, சட்டங்கள், தீர்ப்புகள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய உங்களுடைய கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் உருவாக்குகிறோம்.

இப்படி பார்த்துபார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

144 பேர் ஆதரவு

அதன் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் பங்கேற்ற 146 பேரில் 144 உறுப்பினர்கள் அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து விட்டதால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை.

அதே நேரத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் (எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி) வாக்கெடுப்பு நேரத்தில் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் 144 பேர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரித்தோர்

இந்த தீர்மானத்தை ஆதரித்து அவை முன்னவர் துரைமுருகன், செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சதன் திருமலை குமார் (ம.தி.மு.க.), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ஜெயலலிதா ஆட்சியில்...

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் இதேபோல் தமிழக சட்டசபையில் கவர்னரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழக கவர்னராக சென்னாரெட்டி இருந்தபோது அவர் குறித்து விவாதிப்பதற்காக சட்டசபை விதியில் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது அதேபோன்று சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்