'முதல்-அமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்' சபாநாயகர் அப்பாவு பேட்டி
“முதல்-அமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.;
நெல்லை,
அமைச்சர்கள் இலாகா மாற்ற பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியது எனக்கு வேதனை அளிக்கிறது. அவர் அதை தவிர்த்து இருக்கலாம். ஏற்கனவே கவர்னரால் பதவி பிரமாணம் செய்யப்பட்டு அமைச்சராக உள்ளவர் செந்தில்பாலாஜி. அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் மீது வழக்கு, வழக்கின் நிமித்தம் கைதோ அல்லது நீதிமன்ற காவலில் இருந்தாலோ அவர்கள் பதவியில் நீடிக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியாது. இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி இப்போதும் அமைச்சராக தான் இருந்து கொண்டிருக்கிறார். அதில் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்-அமைச்சர் உத்தரவிடவில்லை.
தலையிடுவதை தவிர்க்க வேண்டும்
அமைச்சர்களுக்கு இலாகாக்களை பிரித்து கொடுப்பதற்கு முதல்-அமைச்சருக்கு முழு உரிமை உண்டு. முதல்-அமைச்சரின் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதசார்பற்ற நாடு என்று இருக்கிறது.
ஆனால், கவர்னர் வெளிப்படையாகவே இது மத சார்புள்ள நாடு என்று அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம் அல்ல. முதல்-அமைச்சர் தமிழக இளைஞர்களின் நலனுக்காக, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றால் கூட அதையும் ஜாடை மாடையாக கொச்சைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறை
கவர்னர் சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் ஜனநாயகத்தின் கோவிலாக இருப்பது சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்.
ஆனால், அமலாக்கத்துறையினர் ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு யாரையோ திருப்திப்படுத்த அதனுள் அத்துமீறி சென்றிருக்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. ஜனநாயக மாண்பையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.