மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொன்முடிக்கு உடனடியாக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-03-21 11:58 GMT

கோப்புப்படம்  

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. இந்நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி முதல்-அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்ததோடு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார். கவர்னரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கண்டித்திருந்தது.

இந்நிலையில், கவர்னரின் சட்டத்திற்கு புறம்பான இச்செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்ய மறுப்பதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், இவரை நியமிக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக கவர்னர் அதை செய்யத்தான் வேண்டும் என்றும், நாளைக்குள் க.பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்றும், இல்லையேல் சுப்ரீம் கோர்ட்டு கவர்னருக்குக் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கவர்னர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே என்றும், தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக உள்ளன எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உடனடியாக க. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென கவர்னரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும் செயல்படும் கவர்னர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்