கவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-01-12 19:16 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார். துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள் மீதான குற்றச்செயல்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (11.01.2024) காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சூழலில் அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் உள்ள கவர்னர் "கலந்துரையாடல்" நிகழ்வுக்காக பல்கலைக்கழக வளாகம் சென்றதும், அங்கு குற்றக்கறை படிந்த துணை வேந்தர் உட்பட பேராசிரியர்களை அழைத்து பேசியதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விசாரணை நடந்து வரும் சூழலில் கவர்னர் வருகை தருவது சரியல்ல என மாணவர், இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அலட்சியம் செய்து, அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு, கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கையால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல, சாட்சியங்கள், ஆவணங்கள் இடம் மாற்றப்படுமோ என ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள அரசுக்கு, கவர்னர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் செய்த முறையீட்டில், கவர்னர், முதல்-அமைச்சரை சந்தித்து பேசி சுமூக நிலைக்கு திருப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கவர்னர் எனும் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்