சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Update: 2024-02-12 06:52 GMT

சென்னை,

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி 2 நிமிடங்களில் உரையை நிறைவு செய்தார். இதையடுத்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

பின்னர், அவை முன்னவர் துரை முருகன், கவர்னர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்றாலும் அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல் நாள் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் சட்டசபை நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் கூறியதாவது:-

கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு மக்களும் சட்டமன்றமும் என்று சபாநாயகர் கூறினார். அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.

மரபை மீறி தேவையில்லாத விஷயங்களை சபாநாயகர் பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார். பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருக்கலாம்; ஆனால் அவை மாண்புக்காக அமர்ந்திருந்தோம். கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்