மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.;
சென்னை,
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். எப்படியாவது அரசுப் பணி வாங்கிட வேண்டும் என்பதே இளைஞர்களின் கனவாக உள்ளது. அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமென்றால், அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும்.
முழு ஈடுபாட்டோடு அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை விரைவாக திருத்த உயர் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குடிமைப்பணி தேர்வுகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் தேர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. என்னுடைய பிரதிநிதியாக இருந்து மக்கள் சேவைகளை நிறைவேற்றுங்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். முதல்-அமைச்சராக இருந்து மட்டுமல்ல... தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன்.
கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும்; அவர்களது பிரச்னையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் நம்பிக்கையையும் மனநிறைவையும் தரும். உட்கார வைத்து பேசுவதுதான் சக மனிதரின் சுயமரியாதை என்பதை நினைத்து மதிப்பு கொடுங்கள்.
என்னுடைய கோரிக்கையை எல்லோரும் கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்சினை தீர்ந்த மனநிறைவை பொதுமக்களுக்குத் தரும்.
கடந்த 2 ஆண்டுகளில் 12, 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.