அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

சேலம் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2023-05-14 20:15 GMT

சேலம் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

ஆய்வு கூட்டம்

தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் மூலம் அந்த திட்டங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவுறுத்தப்பட்டு உள்ளது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு வந்தபோது, பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். குறிப்பாக, வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை போன்றவை கேட்டு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோன்று, 2023-2024-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சேலம் மாவட்டத்திற்கென பல்வேறு துறைகள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விரைவாக செல்ல...

மேலும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைவாக செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், உதவி கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்