வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவியாக ரூ.181.40 கோடி வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,87,275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவியாக ரூ.181.40 கோடி வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட அதிகமாக பெய்திருந்தாலும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து பயிர்கள் கருகின.
இதனால், 1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான 2022-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முழுப் பருவத்திலும் போதிய மழையில்லாததால் பயிர்கள் கருகி, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டதால், இம்மாவட்டங்களில் "மிதமான விவசாய வறட்சியை" (Agricultural Drought of moderate nature) அறிவித்திட அரசு ஆய்வு செய்து, புதுக்கோட்டை மாவட்டம் - ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி, சிவகங்கை மாவட்டம் - இளையான்குடி, காளையார்கோவில், தேவக்கோட்டை, மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டம் - போகளூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோயில், பரமக்குடி, ஆ.எஸ். மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லானி, திருவாடானை, தென்காசி மாவட்டம் - ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டம் - ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டம் - நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களைச் சேர்ந்த 1,42,832.6787 எக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6,746 விவசாயிகளுக்கு 6,62,60,714 ரூபாயும். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,34,305 விவசாயிகளுக்கு 132,70,95,775 ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25,847 விவசாயிகளுக்கு 25,76,85,982 ரூபாயும், தென்காசி மாவட்டத்தில் 17,096 விவசாயிகளுக்கு 13,85,38,930 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 விவசாயிகளுக்கு 4,43,273 ரூபாயும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3,220 விவசாயிகளுக்கு 2,39,85,964 ரூபாயும், என மொத்தம் ஆறு மாவட்டங்களில் 25 வட்டாரங்களில் உள்ள 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்கிட தமிழ்நாடு அரசால் 09.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.