"வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு முனைப்புடன் உள்ளது" -அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
“வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு முனைப்புடன் உள்ளது” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.;
"வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு முனைப்புடன் உள்ளது" என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பால் எந்த பகுதிகளிலும் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் பொது மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் எந்த சூழலையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு முனைப்புடன் உள்ளது.
தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையால் எந்த பகுதியிலும் மழை பாதிப்பால் தண்ணீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி
மழையினால் பாதிப்பு ஏற்பட்டாலும் சாலைவசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமானவைகள் எதுவும் தடைபடாமல் இருக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமையிலான அரசு எந்தவித போராட்டத்தையும் கண்டு பயப்படப்போவதில்லை. மக்கள் நலன் மட்டுமே எங்களுக்கு குறிக்கோள். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளும், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
நெல்லை - தென்காசி மற்றும் நெல்லை -பாபநாசம் ஆகிய சாலை பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு நெல்லை மாவட்டத்தில் 134 இடங்கள் தயார் நிலையில் உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
மழை நீர் செல்லக்கூடிய பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 831 கிராமங்களில் 605 கோடியே 75 செலவில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் கொடுக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் கோரப்பட்டு அடுத்த 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். நெல்லை மாவட்டத்தில் உள்ள குடிநீருக்கான உறைகிணறுகள் 95 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருட்கள்
இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கு தேவையான பொருட்கள், தீயணைப்பு துறை சார்பில் பயன்படுத்தக்கூடிய ரப்பர் மிதவை படகுகள், மிதவைகள் மற்றும் வெள்ள காலங்களில் மக்களை மீட்க பயன்படுத்தப்படும் லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் மழை வெள்ள காலங்களில் முறிந்து விழும் மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தேவையான எந்திரங்கள், மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்த தேவையான ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
பாளையங்கால்வாய்
மேலும் மழை வெள்ள காலங்களில் வீட்டுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளை மீட்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் பிடிக்கப்படும் பாம்புகளை எவ்வாறு பிடித்து காட்டுப்பகுதியில் விடப்படும் என்பன போன்ற காட்சிகளும் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் 5 அடி நீளம் கொண்ட 3 பாம்புகளை மீட்கும் காட்சிகள் செய்து காட்டப்பட்டது. முன்னதாக மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பாளையங்கால்வாய் தூர்வாறும் பணியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டுக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் பூங்காவை திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ.-மேயர்
இந்த நிகழ்ச்சிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் சந்திரசேகர், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன், தி.மு.க. மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலா சத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கவுன்சிலர்கள் பாஸ்கர், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.