அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க துணை தலைவர் வேலுபாலசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகி சுமதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
மாநில செயலாளர் ஆ.அம்சராஜ் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார்.
தர்ணாபோராட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து, தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.
காலமுறை ஊதியம்
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். பொதுவினியோக முறையை சீர்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் எஸ்.செபாஸ்டியன் நன்றி கூறினார்.