நீண்ட நேர மின் தடையால் அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
நீண்ட நேர மின் தடையால் அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கீழப்புலியூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் மழைபெய்தது. இதனால் நள்ளிரவு 12.30 மணி முதல் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை சிறிதுநேரம் மின் வினியோகம் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் விவசாயிகள் மோட்டார் பம்புகளை இயக்கியதாலும், வீடுகளில் மிக்சி, கிரைண்டர்களைஇயக்கியதாலும், மின்சார டிரான்ஸ்பாரத்தில் பழுதுஏற்பட்டு மீண்டும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து பலமணி நேரம் மின்சாரம் தடைபட்டதால், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள் மின்விசிறியின்றி தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மின்வாரியத்தை கண்டித்தும், தடையில்லாமல் தொடர்ந்து மின்வினியோகம் செய்யக்கோரியும், கிராம மக்கள் அந்தவழியே சென்ற 3 அரசு பஸ்களை நேற்று இரவு வழிமறித்து சிறைபிடித்தனர். இரவு 8.30 மணிமுதல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், குன்னம் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கீழப்புலியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.