நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள்

நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள் குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-17 18:45 GMT

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 94 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் பல பஸ்கள், அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவது இல்லை. பஸ் நிறுத்தங்களில் இருந்து 100 அடிகளுக்கு முந்தியோ அல்லது 100 அடிகளுக்கு பிந்தியோ நிறுத்தப்படுகின்றன. பயணிகளை அங்குமிங்குமாக ஓடவிடுகிறார்கள். இதனால் பயணிகள் தவறிவிழும் நிலை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி பஸ் பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆபத்தான பயணம்

வினோத்:- பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், வயதானவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்சை நம்பி தான் உள்ளனர். ஆனால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு பஸ்கள் சரி வர இயங்குவதில்லை. 15 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டும் பஸ் வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி காலையிலும், மாலையிலும் பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் நிற்பது கிடையாது. இதனால் பலர் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பஸ்களை சரியான வழித்தடங்களில் இயக்குவதோடு, பஸ் நிறுத்தங்களில் முறையாக நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலை உணவு சாப்பிடாமல்...

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூரை சேர்ந்த முருகேசன்:- சில பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இருந்தும் பஸ்கள் அதற்கு முன்பாக அல்லது சற்று தள்ளி நிறுத்தி தான் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். பயணிகள் நிழற்குடை பயன்பாடில்லாமல் போகிறது. மேலும் காலை, மாலை நேரத்தில் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த பஸ்களை ஏற பயணிகள் ஓட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அப்படி ஏறுபவர்களில் சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ஒரு சிலர் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே அந்த நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பஸ்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. சில பஸ்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்து விடுகிறது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் வீட்டில் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் விடுமுறை, பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச பயணம்

ஓய்வு பெற்ற போக்குவரத்துறை அதிகாரிகள், கண்டக்டர்கள்:- ஷேர் ஆட்டோ போல் பஸ்கள் நின்று செல்லும் என்ற எண்ணத்தில் பயணிகள் கண்ட இடங்களில் நிறுத்தி ஏறுகின்றனர். இறங்கவும் செய்கின்றனர். அப்படி நிறுத்தாவிடில் ஓடும் பஸ்சில் கீழே குதித்து விடுகின்றனர். ஏற்கனவே பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தான் அடுத்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. பயணிகள் இறங்க வேண்டும் என்றால் நிறுத்துவோம். பயணிகள் இறக்கம் இல்லையென்றால் நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் செல்லும். அப்போது நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் ஓடி வருவதால் சற்று தள்ளி நிறுத்தி பஸ்சில் கூட்டமாக இருந்தாலும் ஏற்றி செல்வோம். சில இடங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைக்கு பயணிகள் வந்து நின்று பஸ் ஏறுவதில்லை. அதற்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தி ஏறுகின்றனர். அரசு டவுன் பஸ்களிலும் கதவுகள் அமைத்தால் பயணிகள் படியில் தொங்கியவாறு பயணம் செய்வது தவிர்க்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயண அட்டை குறிப்பிட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு, வழித்தடம் குறிப்பிட்டு வழங்க வேண்டும். அருகே உள்ள பள்ளி, கல்லூரிகளை விட்டு விட்டு தொலைவில் வந்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை தவிர்க்கலாம். அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலவதியாகும் பஸ்களை ஏலம் விடுவதை தவிர்த்து விட்டு அரசு பள்ளிகளுக்கு வழங்கலாம். பள்ளி சார்பில் அந்த பஸ்சில் பராமரிப்பு செலவுகளை மேற்கொண்டு மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரவும், வீட்டிற்கு கொண்டு விடுவதற்கும் பயன்படுத்தலாம். இதனால் அரசு பஸ்களில் கூட்டத்தை தவிர்க்கலாம். அரசின் கொள்கை முடிவான டவுன் பஸ்களில் மகளிர்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதிலும் தகுதியான மகளிர்களுக்கு மட்டும் இலவச பயணம் அனுமதித்தால் டவுன் பஸ்களில் கூட்டத்தை குறைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்