நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள்-பயணிகள் கருத்து

நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் அரசு பஸ்கள் செல்வதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-17 18:30 GMT

அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 80 பஸ்களும், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 90 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் பல பஸ்கள், அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவது இல்லை. பஸ் நிறுத்தங்களில் இருந்து 100 அடிகளுக்கு முந்தியோ அல்லது 100 அடிகளுக்கு பிந்தியோ நிறுத்தப்படுகின்றன. பயணிகளை அங்குமிங்குமாக ஓடவிடுகிறார்கள். இதனால் பயணிகள் தவறிவிழும் நிலை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி பஸ் பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆபத்தான பயணம்

அரியலூரை சேர்ந்த வினோத்:- அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், வயதானவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்சை நம்பி தான் உள்ளனர். ஆனால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு பஸ்கள் சரி வர இயங்குவதில்லை. 15 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டும் பஸ் வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி காலையிலும், மாலையிலும் பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் நிற்பது கிடையாது. இதனால் பலர் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பஸ்களை சரியான வழித்தடங்களில் இயக்குவதோடு, பஸ் நிறுத்தங்களில் முறையாக நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

தா.பழூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால்:- அரசு பஸ்கள் உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் பயணிகளை இறங்க கூறுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போதுமான அளவு பஸ் வசதி இல்லாத நிலை தற்போது நிலவி வருகிறது. இந்தநிலையில் உரிய பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழிப்பது, அவர்கள் அவசர தேவைகளுக்கு பஸ்சை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மோட்டாா் சைக்கிள், கார்களில் பயணம் செய்து விடுகிறார்கள். ஆனால் ஏழ்மையில் இருக்கும் நடுத்தர மக்கள் தான் பஸ்சை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்

அரியலூரை சேர்ந்த பெரியசாமி:- அரியலூர் பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி உள்பட வெளியூருக்கு செல்லும் பஸ்களும், கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் காலை மற்றும் மாலையில் வந்து செல்லும் நேரங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது. நிறைய மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். இதனால் அதிக மக்கள் பயணிக்கும் இடங்களுக்கு மட்டும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கினால் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.

இலவச பயணம்

அரியலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துறை அதிகாரிகள், கண்டக்டர்கள்:- ஷேர் ஆட்டோ போல் பஸ்கள் நின்று செல்லும் என்ற எண்ணத்தில் பயணிகள் கண்ட இடங்களில் நிறுத்தி ஏறுகின்றனர். இறங்கவும் செய்கின்றனர். அப்படி நிறுத்தாவிடில் ஓடும் பஸ்சில் கீழே குதித்து விடுகின்றனர். ஏற்கனவே பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தான் அடுத்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. பயணிகள் இறங்க வேண்டும் என்றால் நிறுத்துவோம். பயணிகள் இறக்கம் இல்லையென்றால் நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் செல்லும். அப்போது நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் ஓடி வருவதால் சற்று தள்ளி நிறுத்தி பஸ்சில் கூட்டமாக இருந்தாலும் ஏற்றி செல்வோம். சில இடங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைக்கு பயணிகள் வந்து நின்று பஸ் ஏறுவதில்லை. அதற்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தி ஏறுகின்றனர். அரசு டவுன் பஸ்களிலும் கதவுகள் அமைத்தால் பயணிகள் படியில் தொங்கியவாறு பயணம் செய்வது தவிர்க்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயண அட்டை குறிப்பிட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு, வழித்தடம் குறிப்பிட்டு வழங்க வேண்டும். அருகே உள்ள பள்ளி, கல்லூரிகளை விட்டு விட்டு தொலைவில் வந்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை தவிர்க்கலாம். அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலவதியாகும் பஸ்களை ஏலம் விடுவதை தவிர்த்து விட்டு அரசு பள்ளிகளுக்கு வழங்கலாம். பள்ளி சார்பில் அந்த பஸ்சில் பராமரிப்பு செலவுகளை மேற்கொண்டு மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரவும், வீட்டிற்கு கொண்டு விடுவதற்கும் பயன்படுத்தலாம். இதனால் அரசு பஸ்களில் கூட்டத்தை தவிர்க்கலாம். அரசின் கொள்கை முடிவான டவுன் பஸ்களில் மகளிர்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதிலும் தகுதியான மகளிர்களுக்கு மட்டும் இலவச பயணம் அனுமதித்தால் டவுன் பஸ்களில் கூட்டத்தை குறைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்