மேலூரில் நடுரோட்டில் நின்று ஏற்றி செல்வதால் பயணிகள் அவதி - தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்ல மறுக்கும் அரசு பஸ்கள்
மேலூரில் தற்காலிக பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் செல்லாமல் நடுரோட்டில் நின்று ஏற்றி செல்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.;
மேலூர்
மேலூரில் தற்காலிக பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் செல்லாமல் நடுரோட்டில் நின்று ஏற்றி செல்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலூர் பஸ் நிலையம்
மதுரைக்கு அருகே வேகமாக வளர்ந்து வரும் நகரம் மேலூர் ஆகும். திருச்சி ரோடு, சிவகங்கை ரோடு, திருப்புவனம் ரோடு, நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மதுரை ரோடு ஆகிய ரோடுகள் மேலூரில் சந்திக்கின்றன. இதனால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மேலூருக்குள் வந்து செல்கின்றன. இங்கு செயல்பட்டு வந்த பஸ் நிலையம் நவீன முறையில் கட்டுவதற்கு தமிழக அரசு 6.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து பஸ் நிலையம் கட்டும் பணிக்காக பஸ் நிலையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
பஸ் நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ஆங்காங்கே ரோட்டில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் சாலையோரத்தில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். மூடப்பட்ட பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் முடியும் வரை அனைத்து டவுன் பஸ்களும் ஒரே இடத்தில் நின்று பொதுமக்களை ஏற்றி செல்ல வசதியாக தற்காலிக பஸ் நிலையம் அழகர்கோவில் சாலையில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் எதிர்ப்பு
தற்காலிக பஸ் நிலையம் செயல்படுவது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை கேட்பதற்கான கலந்தாய்வு கூட்டம் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேலூர் அரசு மருத்துவமனை சாலை, சானல் ரோடு உள்ளிட்டவற்றை ஒருவழிபாதையாக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் இயக்குவது உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட்டு தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க அழகர்கோவில் ரோட்டில் அனைத்து பஸ்களும் சென்றால் கூடுதலாக நெரிசல்தான் ஏற்படும் என பொதுமக்களும், பஸ் டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாதவூரை சேர்ந்த சின்னகருப்பு கூறியதாவது:- மேலூர் நகரில் செயல்பட்டு வந்த பஸ் நிலையத்துக்குள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். அவ்வாறு இருக்க பஸ் நிலையத்தை மூடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் வசதிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர். திருவாதவூர் ரோட்டிலும், சிவகங்கை ரோட்டிலும் அவ்வழியே வரும் அனைத்து டவுன் பஸ்களும் பயணிகளை ஏற்றி செல்ல வசதியாக செக்கடி பஜாரில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இல்லையெனில் மூடப்பட்ட பஸ் நிலையம் முன்பு தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.
உரிய நடவடிக்கை வேண்டும்
மேலூர் கடை வியாபாரி திருநாவுக்கரசு கூறியதாவது:- மேலூருக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை நம்பித்தான் அனைத்து வர்த்தக நிறுவனங்களும், கடை வியாபாரங்களும் உள்ளன. மேலூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேலூருக்கு வந்து செல்ல அவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதியாக இருந்த இடங்களில் பஸ் ஸ்டாப்களை அமைக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் கடுமையான வெயிலில் பொதுமக்களை நிற்கவைப்பது பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது என்றார். எனவே, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.