கார் மீது அரசு பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

உறவினரின் திருமணத்துக்காக சென்னைக்கு வந்துவிட்டு திரும்பியபோது கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

Update: 2023-02-13 18:50 GMT

கடலூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 35). இவருடைய மனைவி கவுசல்யா(29). இந்த தம்பதியரின் மகள் சாரா (1½). மதிவாணன் தஞ்சாவூரில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இதற்காக அவர் குடும்பத்துடன் தஞ்சாவூரில் தங்கி இருந்தார். மதிவாணனின் மாமனார் துரைராஜ் (52), மாமியார் தவமணி (46).

இவர்கள் அனைவரும் சென்னையில் நேற்று முன்தினம் காலையில் நடைபெற்ற துரைராஜியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சிக்கு காரில் வந்தனர். இங்கு திருமணம் முடிந்ததும் அதே காரில் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு புறப்பட்டனர்.

கார் மீது மோதல்

இதேபோல் விழுப்புரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டினார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதிவாணனின் கார் முன்னால் செல்ல, அரசு பஸ் பின்னால் சென்றது. கடலூர் மாவட்டம் ஆவட்டியில் நேற்று காலை 5.30 மணிக்கு சென்றபோது கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. பஸ்சின் இடதுபுறத்தில் கார் சிக்கியதால் 100 மீட்டா் தூரத்துக்கு காரை இழுத்து சென்றதோடு, அங்கு சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி நின்றது.

4 பேர் உடல் நசுங்கி பலி

இந்த கோர விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி மதிவாணன், கவுசல்யா, சாரா, தவமணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துரைராஜ் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரைராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்