கோபுர கலசங்கள், 9 நதிகளின் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது

மாயூரநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி கோபுர கலசங்கள் மற்றும் காவிரி உள்ளிட்ட 9 நதிகளின் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Update: 2023-08-30 18:45 GMT


மாயூரநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி கோபுர கலசங்கள் மற்றும் காவிரி உள்ளிட்ட 9 நதிகளின் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

மாயூரநாதர் கோவில்

மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவில் தேவார பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக தல புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற இக்கோவிலின் குடமுழுக்கு வருகிற 3-ந் தேதி நடக்கிறது.

அதை முன்னிட்டு கோவில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 27-ந்தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாயூரநாதர் சாமி கோவிலின் தெற்கு ராஜகோபுரத்தை திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை, வேதம் திருமுறை பாராயணம் செய்து திறந்து வைத்தார்.

புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி

மாயூரநாதர் அபயாம்பிகை சன்னதிகளின் தங்க முலாம் பூசப்பட்ட 2 கலசங்களில் ஒன்று யானை மீதும், ராஜகோபுரத்தின் 9 கலசங்கள் உள்ளிட்ட 88 கலசங்கள் 7 வாகனங்களில் வைக்கப்பட்டும் வீதியுலா நடந்தது. இதில் வேலப்பா தம்பிரான் சாமிகள், கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கையொட்டி நேற்று புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை புகழ்பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில் வேதியர்கள் மந்திரம் முழங்க கடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டது. மேலும் கங்கை, யமுனா, சிந்து, கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மணி ஆகிய ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் 9 கடங்களில் யானை மீது ஏற்றி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.தொடர்ந்து யாகசாலை பிரவேச நிகழ்ச்சியும் சாமி மற்றும் அம்பாளுக்கு கலச அபிஷேகமும் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்