திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர்: விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்
விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர்; சினிமாவிலும் அரசியலிலும் 'டூப்' அறியாதவர். கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர்.
கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம்.
கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.