நல்லாட்சி வார சிறப்பு ஆலோசனை கூட்டம்:பொதுமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

பொதுமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று கடலூரில் நடந்த நல்லாட்சி வார சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.;

Update: 2022-12-24 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லாட்சி வார சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்து துறை மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் பழனி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா மற்றும் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் ஆகியோர் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர்.

முனைப்புடன் செயல்பட வேண்டும்

மேலும், கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன், தங்கள் கல்வி நிலையத்தில் மாணவர்கள் கடைபிடித்து வரும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நல் ஆளுமை குறித்தும் கருத்துகள் தெரிவித்தார்.

விருத்தாசலம் சப்-கலெக்டர் மற்றும் கடலூர் கோட்டாட்சியர் ஆகியோர், அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நல்லாட்சி குறித்தும், அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் புகாருக்கு இடம் அளிக்காத வகையில் வழங்குவதில் முனைப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடனுக்குடன் தீர்வு

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், அரசு திட்டங்களை செயல்படுத்துவதிலும் பொதுமக்களுக்கு நல் ஆளுமை வழங்குவதற்கான அடிப்படை நோக்கங்கள் குறித்தும் தெளிவான புரிதலுடன் கடைநிலையில் உள்ள குடிமக்களுக்கும் அரசு நல திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு உதவிகள் சென்றடைவதை அனைத்து துறை அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பெறும் போது மனுதாரர்களை தொடர்பு கொண்டு உரிய விசாரணை மற்றும் ஆவணங்களை பெற்று அரசு விதிகளின்படி தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

அதையடுத்து முதல்வரின் முகவரி துறை இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து துறை அலுவலர்களால் பதில் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்