கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.;

Update: 2022-08-26 15:31 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு கோமாரி நோள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தரப்பு கூட்டம்

பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள 7 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளி சாகுபடி நிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வேண்டும். மரவள்ளி சாகுபடி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டத்தை தர்மபுரியில் நடத்த வேண்டும். நல்லம்பள்ளி-பொம்மிடி இடையே இணைப்பு சாலை அமைக்க வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

மானியம்

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், விவசாயிகள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் மாவட்டத்தில் 6100 ஹெக்டேர் நிலப்பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்க முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், விஸ்வநாதன், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லாம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்