அகழாய்வில் கண்டெடுத்த தங்கத்தாலி

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலியும், செப்பு நாணயங்களும் கிடைத்தன.

Update: 2023-08-17 18:47 GMT

தாயில்பட்டி, 

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலியும், செப்பு நாணயங்களும் கிடைத்தன.

தங்கத்தாலி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் ெதால்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நேற்று ஒரு அகழாய்வு குழியை தோண்டியபோது, பழங்காலத்தில் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கத்தாலி கிடைத்தது. காண்பதற்கு வித்தியாசமானதாகவும், அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இந்த தாலி உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டைய காலத்திலேயே ஆபரணங்களை நேர்த்தியாக வடிவமைப்பதில் நம் முன்னோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதற்கு இந்த தாலியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினர்.

செப்பு நாணயங்கள்

மதுரை நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் முத்துவீரநாயக்கர் வெளியிட்ட நாணயம், செஞ்சி நாயக்கர் நாணயம் உள்பட 4 செப்பு நாணயங்களும் அகழாய்வு குழிகளில் இருந்து கிடைத்துள்ளன. இந்த செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.

இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் 12 குழிகள் 15 அடி ஆழம் வரை முழுமையாக தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,480 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்