கடத்தல்காரர்கள் மேலும் பல கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது அம்பலம்
படகில் இருந்து 5 கிலோ தங்கம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்கள் மேலும் பல தங்கக்கட்டிகளை கடத்தி வந்திருப்பது அம்பலமாகி உள்ளது. அந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்பினார்களா? அல்லது கையோடு கொண்டு சென்றார்களா? என்பதில் குழப்பம் நீடிப்பதால் கடலில் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பனைக்குளம்,
படகில் இருந்து 5 கிலோ தங்கம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்கள் மேலும் பல தங்கக்கட்டிகளை கடத்தி வந்திருப்பது அம்பலமாகி உள்ளது. அந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்பினார்களா? அல்லது கையோடு கொண்டு சென்றார்களா? என்பதில் குழப்பம் நீடிப்பதால் கடலில் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கடத்தல் சம்பவங்கள்
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன.
இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டு்ள்ளன. சில நாட்களுக்கு முன்புகூட இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள், வீட்டில் பதுக்கிய தங்கக்கட்டிகள் என 33 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
5 கிலோ தங்கம் பறிமுதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் படகில் ரோந்து சென்றனர். மண்டபம் வேதாளை அருகே நடுக்கடலில் உள்ள நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சுங்கத்துறையினரை கண்டதும் படகில் இருந்த கடத்தல்காரர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இருப்பினும் சுங்கத்துறையினர் அந்த படகை பிடிக்க முயன்றனர். உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரையில் உள்ள பாறையில் ஏற்றி படகை நிறுத்திவிட்டு, அதில் இருந்த கடத்தல்காரர்கள் 2 பேரும் கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தங்கக்கட்டிகளுடன் தப்பினர். மேலும் அவர்கள் தங்களிடம் இருந்த டிராவல் பேக்கை படகில் வீசிச்சென்றனர்.
கடலில் தேடும் பணி
இதனிடையே அந்த படகில் சுங்கத்துறையினர் சோதனை செய்து அதில் இருந்த சுமார் 5 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படகின் என்ஜின்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் தப்பிய 3 பேரையும் சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பிச் சென்றவர்கள் வீசிய பேக்கில் இருந்து தங்கக் கட்டிகள் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினர் கடலில் சங்கு குளிக்கும் மீனவர்கள் உதவியுடன் நேற்று காலை முதல் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வரையிலும் இந்த பணி நடைபெற்றது.
கடத்தல்காரர்கள் படகில் இருந்து மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சல் இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும், அதை பிரித்த பின்புதான் துல்லியாக தங்கத்தின் எடையை கூற முடியும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "2 கடத்தல்காரர்களை ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றிருக்கிறார். 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்ல நேர்ந்ததால்தான், தங்களால் தூக்கிச்செல்ல முடியாது எனக்கருதி தங்கத்துடனான பார்சலை படகில் போட்டுவிட்டு தப்பி உள்ளனர். அப்படி ஆனால், மோட்டார் சைக்கிளில் இன்னும் பல கிலோ எடை கொண்ட தங்கக்கட்டிகளுடன் அவர்கள் தப்பி இருக்கக்கூடும். அவ்வாறு கொண்டு சென்றால், வேறு எங்காவது சிக்கி விடக்கூடும் என அவர்கள் கருதி, குறிப்பிட்ட ஒரு கடல் பகுதியில் மற்ற தங்கக்கட்டிகளுடனான பார்சலை அவர்கள் கடலில் வீசி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் ஆழ்கடலில் பகுதியில் அவ்வாறு தங்கத்தை வீசி இருக்க முடியாது என கருதுகிறோம். அவ்வாறு வீசி இருந்தால் கடலோர கடல் பகுதியில்தான் தங்கக்கட்டிகள் கிடக்கும்.
அதே நேரத்தில் நொச்சியூரணி கடல் பகுதியில் தேடியதில் வேறு தங்கக்கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தினோம். 2-வது நாளாக நாளை (அதாவது இன்று) தேடும்பணி நடைபெறும். அந்த பணி நிறைவு பெற்ற பின்னர்தான், ஏற்கனவே படகில் இருந்து எடுக்கப்பட்ட தங்கக்கட்டிகளின் மொத்த எடை, அதன் மதிப்பு எவ்வளவு என்பது? குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீவிர ரோந்து
இந்தநிலையில, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக நடக்கும் கடத்தலை தடுக்க தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிகாரிகள் தற்போது தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.