வனத்துறை அதிகாரியின் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டையில் வனத்துறை அதிகாரியின் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 40). உளுந்தூர்பேட்டை வனத்துறையில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (36). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணிக்கு சென்றார். இதையடுத்து கவிதா தனது மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அரிகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் அங்கு கவிதாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த கவிதா சங்கிலியை கைகளால் பிடித்து கொண்டார்.
இதில் சங்கிலி அறுந்ததில் ஒரு பகுதி மர்மநபரின் கையில் சிக்கியது. இதையடுத்து மர்மநபர் தனது கையில் சிக்கிய 3½ பவுன் சங்கிலியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை கவிதா பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
வலைவீச்சு
இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.