மண்டபம் அருகே கடலில் தங்கக்கட்டிகள் வீச்சு?

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள், மண்டபம் அருகே கடலில் வீசப்பட்டதா? என 3 பேரை பிடித்து மத்திய வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-05-30 18:45 GMT

பனைக்குளம், 

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள், மண்டபம் அருகே கடலில் வீசப்பட்டதா? என 3 பேரை பிடித்து மத்திய வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கக்கட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை படகு ஒன்றில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அதிகாரிகள், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பல் ஒன்றில் நேற்று ரோந்து சென்றனர்.

மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்து கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர்.

3 பேரிடம் விசாரணை

மேலும் படகில் வந்த வேதாளை பகுதியை சேர்ந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் கடலோர காவல் படையினரை கண்டதும் அந்த படகில் வந்த நபர்கள் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதி இருப்பதால், எந்த பொருளையும் கடலில் வீசினால், அங்கு தேடிச்சென்று எடுத்துவிடலாம் என்ற துணிச்சலில் இவ்வாறு பொருட்களை கடலில் வீசுவதாகவும், ஆனால், கடலில் வீசிய பொருளை கைப்பற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்