வடமதுரை அருகே தையல் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

வடமதுரை அருகே தையல் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடுபோனது.;

Update: 2022-05-30 15:51 GMT

வடமதுரை அருகே உள்ள பிலாத்து கலைஞர் காலனியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 51). இவர், வடமதுரையில் பைகள் தைக்கும் கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பூங்கோதை. இன்று காலை இவர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்கு சென்று விட்டார். இதேபோல் காமராஜூம், தனது கடைக்கு சென்று விட்டார். இதனைநோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

இந்தநிலையில் மதிய உணவு சாப்பிடுவதற்காக பூங்கோதை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்