அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் டாக்டர் சென்னை லாட்ஜில் தவற விட்ட நகை ஒப்படைப்பு- சத்தியமங்கலம் வியாபாரிகளுக்கு குவியும் பாராட்டு

அமொிக்காவில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் டாக்டர் சென்னை லாட்ஜில் தவற விட்ட நகையை மீட்டு ஒப்படைத்த சத்தியமங்கலம் வியாபாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2023-02-04 21:36 GMT

சத்தியமங்கலம்

அமொிக்காவில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் டாக்டர் சென்னை லாட்ஜில் தவற விட்ட நகையை மீட்டு ஒப்படைத்த சத்தியமங்கலம் வியாபாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நகைக்கடை உரிமையாளர்கள்

சத்தியமங்கலம் கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் எஸ்.என்.ஜவஹர். இவர் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இவருடைய நண்பர் ரமேஷ். இவரும் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் சொந்த வேலை விஷயமாக சென்னைக்கு சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

பிரேஸ்லெட்

வேலை முடிந்ததும் மீண்டும் சத்தியமங்கலத்துக்கு புறப்பட தயாராகினர். அப்போது அவர்கள் தங்கி இருந்த அறையில் சிறிய நகை பெட்டி ஒன்று இருந்ததை கண்டனர். உடனே அந்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 8 கிராமில் செய்யப்பட்ட பெண்கள் அணியும் பிரேஸ்லெட் தங்க நகை இருந்ததை கண்டனர்.

அதை எடுத்துக்கொண்டு லாட்ஜின் வரவேற்பு அறைக்கு வந்தனர். ஆனால் அப்போது வரவேற்பு அறையில் பொறுப்பான நபர் இல்லாததை அறிந்து கொண்ட அவர்கள் 2 பேரும், அந்த நகையை எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வந்து விட்டனர்.

செல்போனில் தொடர்பு...

பின்னர் அவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் இருந்தபடி சென்னையில் உள்ள லாட்ஜின் பொறுப்பாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்க நகையை தொலைத்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் என கூறி உள்ளனர். உடனே அவர் நீங்கள் தங்கி இருந்த அறையில் முன்னதாக தங்கி இருந்தவரின் செல்போன் எண்ணை கொடுக்கிறேன். அவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்து கொள்ளுங்கள் என கூறினார். மேலும் அந்த அறையில் தங்கி இருந்தவரின் செல்போன் எண்ணையும் அவர் கொடுத்தார்.

ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் சத்தியமங்கலம் நகைக்கடை வியாபாரிகள் 2 பேரும் தொடர்பு கொண்டனர். அப்போது எதிர் முனையில் பேசிய பெண், 'என்னுடைய பெயர் ரத்தினம் சுப்பிரமணியம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எனது சொந்த ஊர் ஆகும். அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறேன். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள என்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக வந்தபோது சென்னையில் லாட்ஜ் எடுத்து தங்கினேன். அப்போது எனது பிரேஸ்லெட்டை தவற விட்டு விட்டேன்,' என்றார். மேலும் அந்த பிரேஸ்லெட்டில் உள்ள பிற அடையாளங்களை நகை வியாபாரிகளிடம் டாக்டர் ரத்தினம் சுப்பிரமணியம் கூறினார். இதையடுத்து அந்த நகை ரத்தினம் சுப்பிரமணியத்துடையதுதான் என வியாபாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து ரத்தினம் சுப்பிரமணியம், உடனடியாக சத்தியமங்கலத்துக்கு வந்து தான் தவற விட்ட நகையை பெற்றுக்கொண்டார்.

பாராட்டு

நகையை மீட்டு கொடுத்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு பெண் டாக்டரான ரத்தினம் சுப்பிரமணியம் நன்றி கூறிவிட்டு சென்றார்.

தவற விட்ட நகையை பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த ஜவஹரையும், ரமேசையும், வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்