ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.;
திருப்புவனம்
திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ரம்ஜான்
திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். புதன்கிழமை மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும். வாரச்சந்தையில் திருப்புவனத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
வருகிற 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் திருப்புவனத்தில் உள்ள வாரச்சந்தைக்கு நேற்று மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மதுரை, மேலூர், திருமங்கலம் உள்பட பல பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அதிகமான ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். சில வியாபாரிகள் முதல் நாள் இரவே ஆடுகளை கொண்டு வந்து சந்தை வளாகத்தில் கட்டி வைத்திருந்தனர்.
ரூ.1 கோடிக்கு விற்பனை
10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் எனவும், 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடாய் ரூ.11 ஆயிரம் எனவும் விற்பனை செய்யப்பட்டது. கூடுதலாக கறி உள்ள ஆடு, கிடாய்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. ஆடு, கிடாய்களை வாங்க முஸ்லிம் மக்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக சந்தையில் கூடினார்கள். இதனால் சந்தையில் வியாபாரம் களை கட்டியது.
நேற்று மட்டும் சுமார் 3,000 முதல் 5,000 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று ஒரே நாளில் திருப்புவனம் வாரச்சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடு, கிடாய்கள் விற்பனையானது. இதேபோல் கோழி, சேவல்கள் அதிகம் விற்பனையானது. சந்தைக்கு ஆடு, கிடாய்களை ஏற்றி வந்த வியாபாரிகளின் வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அதிகமாக நின்றது. இதேபோல் இரு சக்கர வாகனங்களும் ரோட்டில் அதிகமாக நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்றன.