கரூர் மாவட்டம், வரவணை ஊராட்சி பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல். இவர் தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிர்வேல் தனது தோட்டத்தில் அமைந்துள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த வெறிநாய்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடிக்க முற்பட்டுள்ளன. அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதனால் வெறிநாய்கள் தப்பி ஓடி விட்டன. இதில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் ஒரு ஆடு பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளது. இதேபோல் வரவணை ஊராட்சி பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்தி கால்நடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.