ஊதியூர் அருகே மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆடு-கன்றுக்குட்டியை கொன்றது
காங்கயத்தை அடுத்த ஊதியூர் மலையடிவாரப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 3-ந் தேதி மர்ம விலங்கு ஒரு செம்மறி ஆட்டை பட்டியில் இருந்து சிறிது தூரம் தூக்கிச்சென்று கொன்று போட்டு விட்டு சென்றது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள மற்றொரு தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு அங்கு மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கிச் சென்று கொன்றுவிட்டு வனப்பகுதியில் போட்டு விட்டு சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் சிறுத்தையாக இருக்குமோ என்ற அச்சத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த மர்ம விலங்கு குறித்து எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாக வில்லை.
மர்ம விலங்கின் கால் தடம்
இந்தநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு பெரிய அளவிலான விலங்கின் கால்தடம் இருப்பதாக காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த வனத்துறைனையினர் அப்பகுதிக்கு சென்று அந்த கால்தடத்தை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது வெறிநாய்கள் கால்தடம் போல் இல்லாமல், அதைவிட பெரிய அளவில் உள்ளது. இது சிறுத்தையின் கால்தடமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி சிறுத்தையாக இருந்தால் அது ஊதியூர் வனப்பகுதியை விட்டு கிழக்கு நோக்கி சென்றிருக்கலாம். மேலும் இந்த கால்தடம் இருக்கும் பகுதியில் சோள தட்டுக்கள் ஆளுயரத்திற்கு வளர்ந்து உள்ளதால் அதில் அந்த மர்ம விலங்கு பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
அதனால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம் என்றனர்.