பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர்-கூட்ட நெரிசலால் அவதி

Update: 2023-01-12 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஆடுகள் விற்பனை

பாப்பாரப்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சின்ன ஏரி பகுதியில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். தற்போது சின்ன ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் பாப்பாரப்பட்டியில் இருந்து பனைக்குளம் செல்லும் ஏரிக்கரை பகுதியில் நேற்று சந்தை கூடியது.

இந்த சந்தைக்கு பென்னாகரம், வட்டுவனஅள்ளி, பிக்கிலி, பனைக்குளம் உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மலைப்பகுதி கிராமங்களிலிருந்து சுமார் 8 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

கூட்ட நெரிசல்

அவை எடைக்கு ஏற்றவாறு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகின. இதேபோல் ஏராளமான மாடுகளும் விற்பனைக்கு வந்தன. அவை சராசரியாக ரூ.30 ஆயிரத்துக்கு விலைபோனது. ஆடு, மாடுகளை தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஏராளமான வியாபாரிகளும், கால்நடை விற்பனையாளர்களும் குவிந்ததால், சந்தையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் போதிய இடவசதி இல்லாததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்