மதிப்பெண் பட்டியல் வெளியீட்டில் மீண்டும் குளறுபடி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் வெளியிட்டதில் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.;
குளறுபடி
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கடந்த முறையும் அதற்கு முன்பும் குளறுபடி ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளும் மிகவும் குளறுபடியாக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இறுதி ஆண்டு முடித்தவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25-க்கு பதில் 100 மதிப்பெண்
இதில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு டபிள்யூ எச் இ என போட்டுள்ளனர். இதே போன்று இண்டர்னல் மதிப்பெண் 100-க்கு 100 என போடப்பட்டுள்ளது. இண்டர்னல் மதிப்பெண் 25 மட்டுமே. ஆனால் 100 என மதிப்பெண் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல குளறுபடிகள் உள்ளதால் படித்து முடித்த மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் குறிப்பாக க்யூ ஆர் கோடு விடைத்தாள்களில் இல்லை. தொலைந்துவிட்டதாக கூறுகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் எப்படி தொலையும்.
பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையான பணிகள் அவுட் சோர்சிங் மூலம் செய்யப்படுவதால் இதுபோன்று குளறுபடிகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்த குளறுபடிகள் குறித்து இரண்டு நாட்களாக பல்கலைக்கழக அதிகாரிகள், துணை வேந்தர் உள்பட பலரை தொடர்புகொண்டு கேட்ட போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடம் கேட்க வேண்டுமென நழுவிக் கொண்டனர். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரோ செல்போன் அழைப்புகளை எடுப்பது கிடையாது.
இந்த குளறுபடிகளை போக்கிட உயர் கல்வித்துறையும், திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.