அடுத்தடுத்து 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு

உளுந்தூர் பேட்டை அருகே அடுத்தடுத்து 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காப்புக்காட்டில் பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-06-09 18:30 GMT

உளுந்தூர்பேட்டை

தொடர் கதையாக

விழுப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மர்ம நபர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைக்கும் சம்பவம் தொடர்கதை போல நிகழ்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பஸ்களில் செல்ல அச்சம் அடைகின்றனர்.

நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அந்த வழியாக சென்ற அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் என 5-க்கும் மேற்பட்ட பஸ்களின் மீது மர்ம கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன.

7 தனிப்படைகள்

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இது தொடர்பாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைத்து பஸ்களின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொழில்போட்டி காரணமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள டீ கடை நடத்தி வந்த சிலர் தொழில் போட்டி காரணமாக இதே காப்புக்காடு பகுதியில் ஒளிந்திருந்து அந்த வழியாக சென்ற பஸ்களின் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்ததை அடுத்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதேபோல் இந்த சம்பவத்திலும் தொழில்போட்டியால் மர்ம நபர்கள் பஸ்களின் மீது கற்களை வீசி வருகிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்